உள்நாட்டு செய்திகள்

தனியார் பஸ் சேவைகள் 50 வீதமாகக் குறைக்கப்படும்

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50 வீதம் இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.

இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20 வீதம் முதல் 25 வீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

“ஏற்கனவே 25 வீதம் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. எமது சங்கத்தைச் சேர்ந்த சில பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் அடிக்கப்படுகிறது. அதனை நிறுத்தக் கூறியும் அவர்கள் கேட்பதில்லை, அத்தகைய பேருந்துகள் மாத்திரமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50 வீதம் ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஒருபோதும் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button