2 இலட்சம் பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக தகவல்

2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
2010 முதல் 2017ஆம் ஆண்டின் முற்பகுதி வரை பாடசாலை கல்வியை இடைநிறுத்திய பிள்ளைகள் குறித்த துல்லியமான தரவுகள் தன்னிடம் இல்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
2018 முதல் 2024 வரையான வருடாந்திர பாடசாலை மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், முதலாம் தரம் முதல் 10ஆம் தரம் வரை ஒவ்வொரு வகுப்பிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் விலகிய விகிதங்களை கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பாடசாலை கல்வியை இடைநிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை 2018இல் 38,839 ஆகவும், 2019இல் 41,503 ஆகவும், 2020இல் 32,540 ஆகவும், 2021இல் 25,492 ஆகவும், 2022இல் 52,596 ஆகவும், 2023இல் 50,345 ஆகவும், 2024இல் 25,823 ஆகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மாறுதல், சர்வதேச பாடசாலைகளில் சேருதல் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் சில மாணவர்கள் பாடசாலை அமைப்பிலிருந்து விலகினாலும், அவர்கள் தொடர்ந்து முறையான கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
இவ்வாறான தரவுகளை இந்தக் கணிப்பீட்டில் துல்லியமாக அடையாளம் காண முடியாது. பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதற்குப் தனிப்பட்ட காரணங்கள், பாடசாலை சார்ந்த காரணங்கள், குடும்பம் சார்ந்த காரணங்கள், சமூகக் காரணங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.




