முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும்

ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டமாக முன்பள்ளிக் கல்வி அமைவதால், அதன் தரத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கண்காணிப்பு விஜயத்தின் போது, வடமேல் மாகாண முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் 2023/2024 கல்வியாண்டுக்கான முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று குருநாகல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி நடவடிக்கைகள் முறையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எதிர்வரும் சில ஆண்டுகளில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியில் நிலைத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அதற்காக தேசிய கல்வி ஆணைக்குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து கல்விக் கொள்கைகள், ஆசிரியர் பயிற்சிக்கான தரநிலைகள் மற்றும் அவற்றை கண்காணிக்கும் ஒழுங்குமுறைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டிலேயே முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முன்பள்ளி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.
மேலும், முன்பள்ளிக் கல்வி குறித்த சரியான புரிதலை சமூகத்தில் உருவாக்குவதும் அவசியமாகும்.
முன்பள்ளிக் கல்வியின் நோக்கம், குழந்தையை ஆரம்பப் பள்ளிக் கல்விக்குத் தயார்படுத்துவதாக இருக்க வேண்டும். எனவே, குழந்தைகளின் இயக்கத் திறன் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களை வளர்ப்பதே அதன் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.
பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளுக்கு தேவையற்ற கல்விச் சுமையை ஏற்படுத்தாமல், அவர்களின் வயதுக்கு ஏற்ற சமூகத் திறன்களையும் அறிவுத் திறன்களையும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும். குறிப்பாக, முன்பள்ளி ஆசிரியர்களாக ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியின் உண்மையான நோக்கத்தை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.




