உள்நாட்டு செய்திகள்

ஹொரணை அரச வங்கியின் உதவி முகாமையாளருக்கு விளக்கமறியல்

ஹொரணை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவ்வங்கியின் உதவி முகாமையாளரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

54 வயதுடைய நந்தன சரத் குமார என்ற சந்தேகநபர் இன்று (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் மேல்நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இதற்கமைய, இச்சம்பவத்துடன் தொடர்புடைய வங்கியின் நடைமுறைகள் குறித்த அறிக்கையொன்றைக் கோரியுள்ள நீதிமன்றம், ஏடிஎம் இயந்திரங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கும், வங்கியின் களஞ்சிய அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பணத்திற்கும் இடையிலான தொடர்பைக் கண்டறியுமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபருக்கு எதிராக இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த 54(1) பிரிவின் கீழான வழக்கை பொலிஸார் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.

இச்சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான பாதுகாப்பு உத்தியோகத்தரும் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button