வெளிநாட்டுச் செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜய் மீண்டும் டெல்லி பயணம்

டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் டெல்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் 27ஆம் திகதி முதற்தடவையாக டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழக நலன்கள் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தார். குறிப்பாக, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், அன்றைய தினம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

முதலமைச்சர் விஜயின் கடந்த டெல்லிப் பயணத்தின் போது, தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்தச் சந்திப்புகள் இடம்பெறாமலேயே அவர் சென்னை திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், மாநிலங்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் எதிர்வரும் 11ஆம் திகதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் டெல்லி செல்லவுள்ளதுடன், இப்பயணத்தின் போது அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button