சலேவின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள தமது கணவருக்கு சித்திரவதை செய்தமை, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமை, அதிகார துஷ்பிரயோகம், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
நேற்று (06) தமது மகனையும் சகோதரனையும் சந்தித்த போது சுரேஷ் சலே வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 10 விடயங்களை இக்கடிதத்தின் மூலம் பொலிஸ்மா அதிபருக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




