மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 65 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், மற்றும் ஈஷான் மலிங்க 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் ஊடாக மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




