சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை பழிவாங்கும் நடவடிக்கையாகும்

முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானியான ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதன்போது சுரேஷ் சலேயின் உருவப்படத்தை தனது பின்னணியில் காட்சிப்படுத்தியவாறு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுரேஷ் சலே என்பவர் தனது சொந்த திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும் இராணுவத்தில் ஜெனரல் பதவி வரை உயர்ந்த ஒரு தேசிய வீரன் ஆவார் என்றும், அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு மூத்த இராணுவ அதிகாரி ஆவார் என்றும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல்வாதிகளைப் போல மக்களுக்கு பொய் கூறி, மக்களை ஏமாற்றி பதவிகளைப் பெற்றவர் அவர் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசியல் தலைமையின் கீழ், இந்நாட்டில் நிலவிய 30 ஆண்டுகால கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும், ஆனால் இன்று அவர் ஈவிரக்கமற்ற முறையில், அமானுஷ்யமாக நடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் சாகர காரியவசம் கவலை வெளியிட்டார்.




