விளையாட்டுச் செய்திகள்

T20 மகளிர் உலகக்கிண்ணம் : இலங்கை மகளிர் அணியில் மாற்றம்

2026 ஐ.சி.சி. மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த 15 பேரடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி அணியில் உள்வாங்கப்பட்டிருந்த இளம் வீராங்கனை சஷினி கிம்ஹானி, உபாதைக்குள்ளானமையினால் அவருக்குப் பதிலாக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சேதனா விமுக்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) விடுத்துள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது சஷினி கிம்ஹானியின் கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை சஷினி கிம்ஹானி இழந்துள்ளார்.

இதனையடுத்தே, அவருக்குப் பகரமான வீராங்கனையாக சேதனா விமுக்தியை அணியில் உள்ளீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button