விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பஞ்சாபின் நியூ சண்டீகர் முல்லான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி டிக்ளேய் செய்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அறிமுக வீரர் மானவ் சுதரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 60 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து, ஃபாலோ-ஒன் முறையில் ஆப்கானிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரரான மானவ் சுதர் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button