விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: வெற்றியுடன் ஆரம்பித்த மெக்சிகோ

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

‘ஏ’ பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்றது.

ஒரேயொரு உலகக் கிண்ணத்திற்காக 48 நாடுகள் போட்டியிடும் இந்த ஆண்டின் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதில் மெக்சிகோ அணிக்கான முதல் கோலை ஜூலியன் குவினோன்ஸ் அடித்து அசத்தினார்.

அதன்படி, போட்டியின் முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் போது மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியிலும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டமுறையைத் தொடர்ந்த மெக்சிகோ வீரர்கள், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலையும் அடித்தனர். ரவுல் ஜிமினெஸ் அடித்த இந்த கோலால் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் திரண்டிருந்த மெக்சிகோ கால்பந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்று, இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் முதல் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button