கிண்ணங்களை வெல்வது எப்போதும் ஊக்கமளிக்கிறது

கிண்ணங்களை வெல்வது எப்போதும் மிகப் பெரிய ஊக்கமளிப்பதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சகலதுறை வீரர் க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட க்ருணால் பாண்டியா, கிரிக்கெட்டில் கிண்ணங்களை வெல்வது எப்போதும் எனக்கு மிகப் பெரிய ஊக்கமளிக்கும் விடயமாக உள்ளது. ஏனெனில், சம்பியன் பட்டம் வெல்வதைப் போன்று வேறு எந்த உணர்வும் இருக்க முடியாது. தனிப்பட்ட வீரராக சிறப்பாக செயல்படுவது, அணி வெற்றி பெறுவதைக் காட்டிலும் சம்பியன் பட்டம் வெல்வது உண்மையில் மிகவும் சிறப்பான விடயம்.
என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் எப்போதும் அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதை மனதுக்குள் நினைப்பேன். சம்பியன் பட்டம் வென்ற அணிகளில் அங்கம் வகிப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. 11 ஆண்டுகளில் 5 கிண்ணங்களை வென்றுள்ளது உண்மையில் மிகப் பெரிய மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது என்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது மூன்று முறை, தற்போது தொடர்ச்சியாக ஆர்சிபி அணிக்காக இரண்டு முறை என மொத்தம் 5 முறை சம்பியன் பட்டம் வென்ற அணியில் க்ருணால் பாண்டியா அங்கம் வகித்துள்ளார்.




