அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சி !!

அவசர அவசரமாக மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம்
கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் என்ற வாக்குறுதியினை வழங்கித்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என மேலும் குறிப்பிட்டார்,
கடந்த தேர்தல்கள் பிரச்சார மேடைகள் ஒவ்வொன்றிலும் தற்போதைய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களாக ரூ.9000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 6000 ஆகவும் ரூ. 3000 மின்சாரக் கட்டணத்தை ரூ. 2000 ஆகவும், 33% ஆல் இவற்றைக் குறைப்போம் என முழங்கினர். ஆட்சிக்கு வந்த பிற்பாடு மேடைகளில் பிரஸ்தாபித்த வாக்குறுதி முழக்கங்களை மறந்துவிட்டு, இன்று நாளையே மின்சாரக் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பெற்ற மக்கள் ஆணையை இன்று காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
மின்சாரக் கட்டணங்களை இவர்கள் குறைப்பதாகக் கூறியதால்தான் இந்நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஜனாதிபதி இதை பிரசித்தமாக வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால் இன்று, மக்கள் ஆணையால் ஆட்சிக்கு வந்துவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை ஏன் இவ்வாறு காட்டிக் கொடுத்து வருகின்றீர்கள் என்று இன்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் ஆணையை இந்தளவு மீறும் அரசாங்கத்திற்கு எதிராக நாம் அணிதிரள வேண்டும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீது எல்லையற்ற அழுத்தத்தை திணிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.




