ஜேர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து

ஜேர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் இலட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் ‘பிசி’யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் இந்த விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான ட்ரீம்லைனர் விமானம் இயக்கப்படவிருந்தது. பயணிகள் இந்த விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் முன்சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென உள்வாங்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் தரையில் மோதியது. 200இற்கும் மேற்பட்டவர்கள் அமர கூடிய வகையான இந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் பெரும் அசாம்பவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானிகள், ஊழியர்கள் என 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அம்பியூலன்ஸ்ம் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




