16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதைத் தடை செய்யப்போவதாகவும், கேமிங் மற்றும் நேரலை தளங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இது உலகளவில் இதுவரை விதிக்கப்பட்ட மிகக் கடுமையான இணையக் கட்டுப்பாடுகளில் ஒன்றாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உள ரீதியான பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சமூக ஊடக ஒழுங்குமுறைகளில் பரந்த அளவிலான மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸ்டார்மர் தெரிவித்தார்.
ஒரு முழுமையான தடையே சரியான தேர்வு என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய அவர், இது எளிதானதாக இருக்காது என்றாலும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியா சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான தமது அணுகுமுறையை மேன்மேலும் கடினமாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




