ஊழலின் விலையை மக்கள் செலுத்துகின்றனர் – நாமல் ராஜபக்ஷ

ஊழல்களால் ஏற்பட்ட பொருளாதார நட்டத்தின் சுமையை அரசாங்கம் மக்களின் மீது திணித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது அமைச்சர்களுக்குக் கமிஷன் கிடைத்தது. ஆனால் இன்று அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய, மின்சார உற்பத்திக்காக நாளொன்றுக்கு 7 முதல் 8 லட்சம் லீற்றர் வரையிலான எரிபொருளை மேலதிகமாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் கூடிய விலைக்கு எரிபொருளை வாங்கியதன் விளைவாக, இறுதியாக மக்கள் மீதே இந்த நட்டம் சுமத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் தனது கட்சி உறுதியாக இருக்கிறது. மாகாண சபைகளின் நிதி நிர்வாகம் மற்றும் அதிகாரம் தற்போது ஜனாதிபதியின் ஒன்பது அரசியல் பிரதிநிதிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. அரசியல் பிரதிநிதிகளிடம் இந்த அதிகாரங்களை வழங்குவதை விடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்கினால் மட்டுமே அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறுவார்கள்.




