அலட்சியத்தின் பலி: சிமெண்டு துண்டு விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மடம்பிட்டியாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புற சுவரிலிருந்து சிமெண்டு பிளாஸ்டர் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து, அந்த சிறுவன் குடியிருப்பு வளாகத்தின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்டுள்ளது. அப்போது, சுவரிலிருந்து சரிந்த சிமெண்டு பிளாஸ்டர் அவரது தலையில் விழுந்துள்ளது.
இதனால் கடுமையாக காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன், கொழும்பு 15, மொடரா, ரந்திய உயனாவைச் சேர்ந்த 7 வயதுடைய மொதிர் சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புற சுவரில் உள்ள சிமெண்டு பிளாஸ்டர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) பலமுறை அறிவித்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கான தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த விவகாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். குறித்த குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




