உள்நாட்டு செய்திகள்

695 மில்லியன் டொலர் IMF நிதி திறைசேரியின் கணக்கில் வைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் கீழான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 5ஆவது மற்றும் 6ஆவது மதிப்பாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கை திறைசேரிக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த மதிப்பாய்வுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது.

நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 2023 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி அங்கீகரிக்கப்பட்டது.

இதன் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை அங்கீகரிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு கடந்த 27ஆம் திகதி கூடியதுடன், அந்த கூட்டத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா குறிப்பிடுகையில், சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கான விதிமுறைகளை இலங்கை வலுவாகச் செயல்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

‘டித்வா’ புயல் மற்றும் மத்திய கிழக்கு போர் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆபத்து நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் வரை மந்தமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுலா வருவாய் குறைவடைந்தமை ஆகியன இதற்கு காரணங்கள் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள போதிலும், கடனின் நிலைத்தன்மைக்கான ஆபத்து அதிக மட்டத்தில் காணப்படுவதனால், விலை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து நிதி்க் கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button