கடந்த ஆண்டு சவாலான ஒன்று – நீதி அமைச்சர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார், அதுபோல அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வசதி எதிர்வரும் மாதங்களில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நாம் கடந்து வந்த ஆண்டு எளிதான ஒன்றல்ல என குறிப்பிட்ட அவர், அது ஒரு சவாலான ஒன்று. ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தித்வா சூறாவளியின் அனுபவம் எமது கட்டமைப்புகள், நிருவகங்கள் மற்றும் எமது மக்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியது. இலங்கையர்களின் மீண்டெழும் தன்மை முதலானவற்றின் சக்தியை இது வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பேரழிவு ஏற்படும் போது, நாட்டு மக்கள் பிளவுபடவில்லை என்பதை நாம் அனுபவ ரீதியாக இதன் ஊடாக கண்டறிந்தோம். இனம், பிராந்தியவாதம், மொழி, மதம் மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், இலங்கையர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துள்ளோம், வளங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்துள்ளோம், ஒரு சிறந்த அமைப்புக்கான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்துள்ளோம். அந்தக் கூட்டு வலிமையே நமது தேசத்தின் அடித்தளம்.




