உள்நாட்டு செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் – ஹர்ஷ டி சில்வா எம்.பி

அதிகாரப்பூர்வ டொலர் பெறுமதி 340 ரூபாயாக உள்ள போதிலும், கறுப்பு சந்தையில் அதன் பெறுமதி 345 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இல்லை. அதிகாரப்பூர்வ டொலர் பெறுமதி 340 ரூபாயாக உள்ள போதிலும், கறுப்பு சந்தையில் அதன் பெறுமதி 345 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வட்டி விகிதத்தை 1 வீதத்தினால் உயர்த்தி தற்காலிகமாக நிலைமை சீரமைக்கப்பட்டாலும், தற்போது மீண்டும் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. சந்தை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குவது, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைந்து வருவதால் சந்தையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. எல்.சி (LC) வரவுகளுக்கான தொகையை வங்கிகள் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மக்கள் ரூபாய் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்ற அச்சத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல ஏற்றுமதியாளர்களும் தங்களது வருமானத்தை நாட்டிற்குள் கொண்டு வரத் தயங்குகின்றனர். உலகளாவிய போர்ச் சூழல் ஏனைய நாடுகளைப் பாதித்தாலும், அமெரிக்காவுடன் பரஸ்பர ஒப்பந்தங்களைச் செய்துள்ள நாடுகளுக்குப் பாதிப்பில்லை. இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினாலும், இதுவரை எந்தவொரு முறையான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. இதன் விளைவாக, இலங்கைக்கு புதிதாக 12.5 வீத வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மொத்த வரி 22.5 வீதமாக உயர்ந்து ஏற்றுமதி, இறக்குமதித் துறை பெரும் பாதிப்பைச் சந்திக்கும். டொலரின் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், சந்தையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர்ந்து மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button