நாட்டைக் கட்டியெழுப்புவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்

நமது நாடு எல்லா வகையிலும் பாரதூரமான ஆபத்திற்கும் அவதானத்திற்கும் முகம் கொடுத்துள்ளது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மக்களின் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் சீர்குலைந்து, வறுமை அதிகரித்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை வெசாக் மகா பெரஹராவை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருட்களின் விலையேற்றம் தொடர்ந்து கூடி வருவதால் நாளாந்தம் மூன்று வேளை உணவுகளைக் கூட உண்ண முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டைப் பற்றியும், நாட்டின் 220 இலட்சம் குடிமக்களைப் பற்றியும் சிந்தித்து, நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். இந்த சிந்தனையோடு, இந்த பார்வையோடு 220 இலட்சம் மக்களும் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் உருவாகி காணப்படும் இந்த ஆபத்தான நிலைமைக்கு மத்தியில் பல சக்திகள் நமது நாட்டை தமது பல்வேறு நடவடிக்கைகளுக்கு இரையாக மாற்றுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பவாத தரப்பினர் இந்த நெருக்கடியை பயன்படுத்தி நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆகையினால், இத்தகைய நிகழ்வுகளுக்கு இடமளிக்கக் கூடாது. ஒரு நாடாக 220 இலட்சம் மக்களினதும் ஒன்றிணைவால், ஒற்றுமையால், ஐக்கியத்தால், சமாதானத்தால், சகோதரத்துவத்தால் பல்வேறு சக்திகள் நமது நாட்டின் மீது விடுக்கும் அச்சுறுத்தல்களையும் சவால்களையும் தோற்கடிப்பதற்கு முடியும். இந்த தருணத்தில் நமது நாட்டின் மீது அழுத்தங்களைச் செலுத்தி வளங்களை கைப்பற்ற சிலர் திட்டமிட்டாலும், நமது நாடு ஒரு ஜனநாயக நாடாக பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் நம்மத்தியில் காணப்பட்டாலும், நாட்டைக் காக்க, ஒன்றாய் கை கோர்க்கத் தயாரான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.




