விசேட தேவையுடைய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நிவாரணம்

பயங்கரவாதச் செயல்கள் காரணமாக விசேட தேவையுடைய முப்படைகள் மற்றும் பொலிஸை சேர்ந்த வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த கலந்துரையாடல் ஒன்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேக்கர தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், யுத்தக் காலத்தில் விசேட தேவையுடைய முப்படைகள் மற்றும் பொலிஸ் வீரர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தைத் தொடங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க, நிவாரணம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக உயிரிழந்த, விசேட தேவையுடைய அல்லது உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறையின்றி பணிக்குச் சமூகமளிக்காததால் சேவையிலிருந்து நீக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக, சுகாதார அமைச்சின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மருத்துவக் குழுவொன்றை நியமிப்பது குறித்தும், அந்த மருத்துவக் குழுவின் பணிகளைப் பிரதேச மட்டத்திற்குப் பரவலாக்கிச் செயல்படுத்துவதற்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த வழிமுறையின் மூலம், நிவாரணங்களை எதிர்பார்த்து நாடு முழுவதும் பரவியிருக்கும் விசேட தேவையுடைய இராணுவ உறுப்பினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், முப்படைகளிடம் உள்ள மருத்துவ வசதிகளை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, அவர்களை மருத்துவக் குழுக்களிடம் ஆற்றுப்படுத்தி நிவாரணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும், தகுதிபெறும் நபர்களுக்குத் தாமதமின்றிப் பலன்கள் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.




