QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை

நாட்டில் தற்போது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு QR குறியீடு மூலம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை என்று தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை எரிபொருள் வழங்கும் முறையை உடனடியாக நீக்க வேண்டும். தற்போது வாரத்திற்கு வழங்கப்படும் 20 லீற்றர் எரிபொருளானது எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை. ஒரு நாளைக்கு 6 லீற்றர் வீதம், வாரத்தின் 6 நாட்களுக்கு மொத்தம் 36 லீற்றர் வரை எரிபொருள் கோட்டாவை அதிகரித்துத் தர வேண்டும்.
கண்டிப்பாக கட்டண உயர்வு வேண்டும். ஏனென்றால், மே மாதத்தில் இரண்டு முறை எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 12 ரூபாயும், 24 ரூபாயும் என மொத்தம் 36 ரூபாய் நட்டத்துடன் தான் நாங்கள் தற்போது எங்களது தொழிலைச் செய்து வருகிறோம். ஏனென்றால், நாங்கள் இன்னும் பழைய மீட்டரில்தான் ஓடுகிறோம், அதாவது முதல் கிலோமீட்டருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாயும் என்ற அடிப்படையில். ஆனால், இந்த விலையில் ஓடும் ஓட்டத்தின் மூலம் எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை.
தற்போது நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அவர்களிடம் ஏதோ ஒரு மந்தகதி காணப்படுகிறது, அது குறித்தும் நாங்கள் ஜனாதிபதி அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கிறோம். அதிகாரிகளின் இந்த மந்தமான போக்கினால்தான் நாங்கள் தற்போது பெரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். உண்மையில் விலை தொடர்பில் தகுந்த அளவுகோல்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சூத்திரம் உள்ளது. அந்த சூத்திரத்தின்படிதான் இனிவரும் காலங்களில் விலை தீர்மானிக்கப்படும். அந்த விலை வாடிக்கையாளருக்கும், சாரதிக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அமையும். அப்போதுதான் இந்த சேவையைச் சரியான முறையில் எங்களால் வழங்க முடியும்.
தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16ஆம் திகதி கொழும்பில் மாபெரும் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். எனவே, நாட்டின் அனைத்து ஒட்டுமொத்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எதிர்வரும் 16ஆம் திகதி காலை 10 மணிக்கு டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள தாமரை கோபுரத்திற்கு அருகில் வருகை தந்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் முன்வைக்கும் எமது செய்திக்கு உங்கள் அனைவரது ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




