மீகொட விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

மீகொட பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றிரவு மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கெப் வாகனம் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.
சம்பவத்தில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கெப் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில் கொடகம சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கெப் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




