ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க புதிய சாதனை

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ‘டயமண்ட் லீக்’ (Diamond League) தடகளப் போட்டித் தொடரில், இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே 92.62 மீட்டர் தூரத்திற்கு நேற்று (4) ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஆசிய தடகள வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் பரிதியை பதிவு செய்த வீரராகவும், உலகின் சிறந்த ஈட்டி எறிதல் பரிதியை பெற்ற வீரர்களில் 8-வது இடத்திற்கும் அவர் முன்னேறியுள்ளார்.
அவரது இந்த சாதனையானது 2026-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த ஈட்டி எறிதல் திறமையாகப் பதிவாகியுள்ளதுடன், 2026-ஆம் ஆண்டில் 90 மீட்டர் எல்லையைக் கடந்த முதல் மற்றும் ஒரே வீரராகவும் ருமேஷ் தரங்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், இலங்கை தடகள வரலாற்றில் 90 மீட்டர் எல்லையைத் தாண்டி ஈட்டி எறிந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ரோம் டயமண்ட் லீக் 2026 ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சேம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே, ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீமின் ஆசிய சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் வந்துள்ளார்.
ஸ்டாடியோ ஒலிம்பிகோ மைதானத்தில் ருமேஷ் பத்திரகே பதிவு செய்த 92.62 மீட்டர் என்ற வெற்றிகரமான எறிதலானது, பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் நதீம் தங்கம் வென்று படைத்த ஆசிய சாதனையை விட வெறும் 35 சென்டிமீட்டர்கள் மட்டுமே குறைவாக இருந்தது.




