வெளிநாட்டுச் செய்திகள்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவிப்பு

அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை தனது வான் பாதுகாப்புப் படை இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை தெரிவித்துள்ளது.

ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க ட்ரோன் மூலம் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றபோது கண்டறியப்பட்டு, ஏவுகணைகள் மூலம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.

கடந்த 26ஆம் திகதி ஏற்கனவே அமெரிக்க எம்க்யூ-9 ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியிருந்தது. மேலும், தனது வான் எல்லைக்குள் நுழைந்த போர் விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் உரிமை கொண்டாடியது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் போர்க்கப்பல்களும் ஈரானின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் முழுமையாக ஈரான் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அனைத்து கப்பல்களும் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், ஈரான் கடற்படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button