உள்நாட்டு செய்திகள்

கிராம அபிவிருத்தியே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் பிரதான நோக்கம்

“பிரஜா சக்தி” வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும், பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள்நேய ஆட்சியின் கீழ் மக்கள் எதிர்பார்த்த உண்மையான அர்த்தத்தை உள்வாங்கி, கிராமிய அபிவிருத்தி மூலம் நாட்டின் அபிவிருத்தியில் மக்களைப் பங்களிப்புச் செய்ய வைப்பதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜா சக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தின் “ஆயிரம் கிராமங்களில், ஆயிரம் பணிகள்” திட்டத்தின் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்வு, நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஜூன் 02ஆம் திகதி நடைபெற்ற ‘பிரஜா சக்தி’ அபிவிருத்தி சபையினால் தரிசுநிலங்களாகக் கிடந்த வயல்களை மீண்டும் பயிர்செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இக்கருத்தினைத் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“அரசின் மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தலாம். இந்தத் திட்டத்தின் பெயரின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், மக்கள்நேய ஆட்சி என்பது அரசு மாத்திரம் செயற்படுவதல்ல, மாறாக அது அரசு, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் ஆகிய அனைத்துத் தரப்புகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சி என்பதை உணர்ந்துகொள்வதாகும்.

தேர்தல்காலங்களில் மாத்திரம் ஆட்சியாளர்கள் மக்களுடன் இணைந்து இயங்குவது அல்ல, மாறாக மக்களை ஆட்சியின் ஓர் அங்கமாக மாற்றிச் செயற்பாட்டு ரீதியாகவே அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் எண்ணக் கருவை, இந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் ஊடாக சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்வாங்கும் விதத்தில் ஸ்தாபித்திருக்கின்றோம்.

பெயரளவிலான வலுவூட்டல் திட்டங்கள் இதற்கு முன்பும் இருந்தன. ஆனால், அவற்றின் மூலம் மக்களுக்கு உரிய பலன்கள் கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே வலுவடைந்தனர். சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுபட்ட மக்கள், 2024 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மாற்றத்தை அடுத்து, நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பைத் தம் கைகளில் எடுத்து இந்த வேலைத்திட்டத்துடன் இணைகிறார்கள்.

பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு, தமது பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையைக் கண்டறிந்து அதனைக் கட்டியெழுப்புவதை இந்தத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ள முடியும்.

உலக அரசியல் பின்னணியில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமையில், பொருளாதாரப் பாதுகாப்புக்காகத் தன்னிறைவு பெற்ற வாழ்க்கை முறையானது எந்தவொரு நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது.

இறக்குமதி செய்ய வேண்டியவற்றை மாத்திரம் இறக்குமதி செய்வதோடு, உற்பத்தி செய்யக்கூடிய அத்தியாவசியப் பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய பொருளாதாரத்தை, உணவுப் பாதுகாப்பின் மூலம் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

அரசு, உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் திட்டங்களின் ஊடாக மக்களின் வறுமை ஒழிக்கப்படும்போது ஒரு வளமான நாடு உருவாவதோடு இயல்பாகவே அழகானதொரு வாழ்க்கையும் உருவாகும் எனப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button