விமான நிலைய நுழைவுப் பாதையில் நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு

பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்குவின் தலையீட்டில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லும் நுழைவுப் பாதையில் நீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, இதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழுவின் தலைமையில் நேற்று அப்பகுதியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்வதும், அவற்றின் நீரேற்றுத் திறனை மேம்படுத்துவது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. கால்வாய்களில் காணப்படும் அடைப்புகளை அகற்றுதல், அவற்றின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் விமான நிலைய நுழைவுப் பாதையில் நீர் தேங்கும் நிலை குறைவடைவதுடன், கடும் மழைக்காலங்களில் சுற்றுவட்டார மக்களுக்கு ஏற்படும் வெள்ள அபாயத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப் பயணிகளும் பொதுமக்களும் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் குறுகிய கால நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படுவதோடு, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை வழங்கும் நோக்கில் நீண்டகால வேலைத்திட்டமொன்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




