கொங்கோ, உகாண்டா மீதான பயணக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

கொங்கோ குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டா ஆகிய நாடுகளை இலக்காகக் கொண்டு பல்வேறு நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு கொங்கோவில் வைரஸ் பரவலின் மையப்பகுதியாக விளங்கும் ‘புனியா’ நகருக்குக் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பொதுச் சுகாதாரத் துறையின் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் பாதிக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொற்றுநோய் ஒழிப்புத் திட்டமொன்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இந்த இரண்டு காரணிகளும் இன்றியமையாதவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதாரப் பிரிவினரால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே உலக சுகாதார அமைப்பின் தலைவரின் இந்த புனியா விஜயம் அமைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, கொங்கோ நாட்டில் இதுவரையில் எபோலா தொற்றுக்குள்ளானதாகச் சந்தேகிக்கப்படும் 906 நோயாளர்களும், 223 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதாரப் பிரிவினரின் தகவல்களின்படி, இந்த வைரஸ் பரவலானது ‘புண்டிபுகியோ’ எனப்படும் எபோலா வைரஸ் வகையினால் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ கண்டறியப்படாமை சுகாதாரத் துறையினருக்கு முன்னாலுள்ள முக்கிய சவாலாகக் கருதப்படுகிறது




