டெங்கு கட்டுப்பாட்டு சோதனை – 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மூன்று நாள் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதல் நாளில் சோதனை செய்யப்பட்ட 31,196 இடங்களில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் 14 மாவட்டங்களின் 72 சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவுகளில் நேற்று (08) தொடங்கிய இந்த விசேட நடவடிக்கையின்போது, 8,121 இடங்கள் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் 1,165 எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 56 பாடசாலைகளில் 7 இடங்களிலும், 178 கட்டுமானத் தளங்களில் 41 இடங்களிலும், 189 அரசு நிறுவனங்களில் 50 இடங்களிலும் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28,230 குடியிருப்பு வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,760 வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 657 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.




