உள்நாட்டு செய்திகள்

பேருந்து சேவை முடங்கும் அபாயம்: சங்கங்கள் எச்சரிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) போக்குவரத்து அமைச்சரை தவறாக வழிநடத்தி வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சுக்கு தாங்கள் கடிதம் ஏதும் வழங்கவில்லை, அதற்குப் பதிலாக தேசிய பேருந்து கட்டணக் கொள்கை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய நகல்களையே வழங்கியுள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அமைச்சரை தவறாக வழிநடத்தியுள்ளது. இதில் பல சிக்கல்கள் இருக்கிறது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, ஜூலை மாதத்திற்குள் வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை அமல்படுத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமை எங்களுக்கு உள்ளது. இக்கொள்கையின் விலை சூத்திரத்தில் உள்ள 12 காரணிகளில், எங்குமே பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. எனினும், கடந்த காலங்களில் டீசல் விலை குறைந்தபோது, மனிதநேய அடிப்படையில் நாங்களாகவே முன்வந்து கட்டணத்தைக் குறைத்தோம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்பட்ட 4 சதவீத கட்டணக் குறைப்பு தொடர்பான நடைமுறை, 9 மாதங்களுக்குப் பிறகு செல்லுபடியாகாது. டீசல் விலை மாறும்போது, இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வது தவறு. வருடாந்திர திருத்தத்தில் 10 சதவீதத்திற்கும் மேல் மாற்றம் ஏற்படும்போது மட்டுமே அமைச்சரவைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த சட்ட சிக்கல்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு அளித்தால் ஆணைக்குழு அதிகாரிகள் சிக்க நேரிடும். எனினும் நாளை அமைச்சருடன் சுமூகமாகப் பேசி இதற்கு தீர்வு காண முயற்சிப்போம். இல்லையெனில் அடுத்த வாரம் தகுந்த முடிவு எடுக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button