வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

கேள்வி விலை மனு கோரல் நடைமுறைகளில் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், இன்று 10 மணிக்கு வெரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் இதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கேள்வி மனு கோரல் விநியோகத்தில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாகன இலக்கத்தகடுகள் அச்சிடும் பணிகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதனால் புதிய வாகனங்களைப் பதிவுசெய்த மற்றும் இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளக் காத்திருந்த இலட்சக்கணக்கான வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான புதிய உத்தியோகபூர்வ உடன்படிக்கையில் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திட்டிருந்தது.
இதன்படி, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று முதல் இலக்கத்தகடுகள் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதால், தட்டுப்பாடின்றி வாகன இலக்கத்தகடுகளை விரைவாக விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




